வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க்கை குறிப்பு

கவிப்பேரரசு வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை பெயர்: திரு. இராமசாமித் தேவர்

தாயார் பெயர்: திருமதி. அங்கம்மாள்

கிராமத்தின் இயற்கை நேசத்திலிருந்து இவருக்குக் கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. பன்னிரெண்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 'தங்கப்பதக்கம்' பரிசு பெற்றார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம். தமிழ்நாட்டின் புதுக்கவிதை முன்னோடிகளின் ஒருவர். கல்லூரிப் பருவத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பல கவியரங்கு மேடைகளில் பங்குபெற்று கவிதைத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார். 19-ஆம் வயதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இவருடைய முதல் கவிதைத் தொகுதி வைகறை மேகங்கள் வெளிவந்தது. கதை- கவிதை- கட்டுரை என்ற வடிவங்களில் இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 'நான்' என்ற பெயரில் இவர் தன் 28 வயதிலேயே சுயசரிதை எழுதியிருக்கிறார். உலகமொழிக் கவிதைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் இவரது எல்லா நதியிலும் என் ஓடம் என்னும் நூலை அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பரிசு பெற்ற கவிராஜன் கதை என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் புதுக்கவிதையில் எழுதப்பட்டிருப்பது தமிழிலக்கியத்தில் முதல் முயற்சி. இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.

1985-ம் அண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன.

பின்னர் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன. நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார். நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும். 1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் இவர் ரஷ்ய நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987-ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தார். தமிழ் அமைப்புகள் அழைப்பின்பேரின் அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள இவர். மேலும் மலேசியா. சிங்கப்பூர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

 

 


செய்திக் கீற்று

தமிழ் மொழிக்கு அடையாளம் "திருக்குறள்..."

தமிழ் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது வழங்கும் விழா 13.02.09 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் மு.வ.அரங்கில் நடைபெற்றது.   தமித்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.   பேராசிரியர்.இரா.மோகன் (ஆட்சிக்குழு உறுப்பினர்) வரவேற்புரை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் புகழ்படைத்த தமிழ்ப்பேரறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்" விருது வழங்கி பேரவையின் உறுப்பினாராக்குவது, தமிழ்ச்சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி கருதித் தமிழ் அறிஞர்களை அழைத்து அவர்தம் சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ்க் கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடத்துதல், மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்விப் பேரவையின் வாழ்நாள் உறுப்பினர்களாகச் சேர்த்து கொள்வது" என்று இதன் நோக்கம் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இரா.கற்பக குமாரவேல் தலைமையேற்று தன் உரையில் விரிவாக எடுத்துக் கூறினார்.

பின்னர் தமிழ்ச்சான்றோர்கள் ஆறு பேருக்கும் அவர்கள் ஆற்றிய தமிழ் பணிக்காக விருதுகள் வழங்கும் விழா துவங்கியது.

பேராசிரியர் அடிகளாசிரியர் - இவர் 57 நூல்கள், தொல்காப்பிய ஆய்வுகள், கவிதை நூல்கள், உரைநடை நூல்கள் என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் பற்றி சிந்தித்து கொண்டிருப்பவர்.

"உரை வேந்தர்" ஒளவை துரைசாமிப்பிள்ளை அவரின் தலைமகன் பேராசிரியர். ஒளவை நடராசன் இவர் சங்க காலப்புலமைச் செல்வியர் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும், முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிலும் இருந்ததுடன் இன்றும் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.

புலவர் இரா.இளங்குமரன் திருக்குறள் ஓதி மண விழா, மணி விழா, மனை புகுவிழா என 3500 நிகழ்வுகளை நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.  திருக்குறளுக்கு வாழ்வியல் உரையும், கருத்துரையும் கண்டதுடன் மேலாய்வு நூல்களாக 60 நூல்களை எழுதியிருக்கிறார்.

பேராசிரியர் எ.சுப்பராயலு தமிழ்ப் பண்பாடு, தமிழ் வரலாறு தொடர்பான ஆங்கிலத்தில் ஆய்வு நூல்கள் பல புனைந்துள்ளார். இவரின் பல நூல்கள் உலகம் முழுவதிலும் பல பேராசிரியர்களால் மேற்கோள் காட்டப்படும் சிறப்பிற்கு உரியவை.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தின் 46 ஆவது குருமகா சந்நிதானம் குன்றக்குடி கிராமத்திட்ட குழுவின் தலைவர், "சமய வாழ்வு", "காற்றில் வந்த கருத்து மழை" என்பன அடிகளாரின் கைவண்ணத்தில் உருவான நூல்கள்.

பேராசிரியர் பி.விருத்தாசலம், "கண்ணகி சிலம்பிந்த காரணம்" என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம், மரூஉ மொழிகளும், வமூஉ மொழிகளும், சிந்தனைச்சுடர் முதலான நூல்கள், சென்னை பல்கலைக் கழகத்தின் அடையாளச் சின்னத்தில் "கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்" என்ற தொடரினை இடம் பெற செய்தவர்.

இவர்கள் அனைவருக்கும் "கவிப்பேரரசு" வைரமுத்து பொன்னாடை போர்த்தி, பொற்பதக்கமும், பொற்கிழியும், "தமிழ்ப் பேரவை செம்மல்" என்ற விருதையும் வழங்கி கெளரவித்தார்.

பின்னர் "கவிப்பேரரசு" வைரமுத்து தன் சிறப்புரையில்... " தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பெரு மக்களுக்கெல்லாம் விருது வழங்கி சிறப்பு செய்வதற்கு எனக்கு கிடைத்த விருதுகளையெல்லாம் விட பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  இங்கு வந்திருக்கும் மாணவ-மாணவிகளே! சான்றோர்களே! உங்கள் வாழ்நாளில் ஒரு மூன்று மணி நேரம் தந்திருக்கிறீர்கள் இந்த தமிழ் சான்றோர்களுக்காக... இது தான் இன்றைய விழாவின் சேதி!  தமிழ்நாட்டில் சேதியற்ற கூட்டம் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கிறது.  ஒரு பத்து, பதினைந்து வயதில் மீசை முளைத்த காலம் முதல் தங்கள் வாழ்நாள் வரை தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பைபிள், குரான், பகவத்கீதை- க்கு கிடைத்த வரவேற்பு ஏன் இன்னும் திருக்குறளுக்கு கிடைக்கவில்லை?  ஒரு நட்சத்திர விடுதியிலாவது தமிழ் திருக்குறள் இருக்கிறதா? இல்லை!   நமது கலாசாரத்தை பற்றி நமக்கே கவலை இல்லை!  அப்புறம் எப்படி திருக்குறள் வளரும்?  தமிழர்களின் உணவு, உடை, நிலம், அடையாளமா என்று பார்த்தால் அதுவும் இல்லை! அவை எல்லாம் மாறிவிட்டன.  தமிழர்களின் மாறாத அடையாளம் மொழி மட்டுமே! இந்த தமிழ் மொழிக்கு அடையாளமாக திருக்குறள் திகழ்கிறது.  ஆனால் தமிழ் அறிவின் சமூகம் சிறுபான்மை சமூகமாக இருக்கிறது.  எனவே வைதீக நம்பிக்கைப்படி இவர்கள் மீது "திருஷ்டி" பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்... நன்றி சொல்வதற்காகவும் இந்த "பூ" இந்த தமிழ் வேர்களின் கால்களில் விழுகிறேன்"  என்று பேசினார்.

விருது பெற்றோர் சார்பில் பேராசிரியர் ஒளவை நடராசன் ஏற்புரை நிகழ்த்தினார்.  அவரைத்தொடர்ந்து, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தன் ஏற்புரையில்... குறிப்பிடும் போது... "தமிழகத்திற்கு எது வேண்டுமானாலும் தலைநகரமாக இருக்கலாம்.  தமிழுக்கு தலைநகரமாக இந்த மதுரை மாநகரம் மட்டும்தான்!  வரலாற்றை வென்று நிற்கிறது.  உலகத்திலேயே ஒரு சமயத்தின் வெற்றியை ஒரு மொழி வென்றிருக்கிறது என்றால் அது இந்த தமிழ் மொழிதான்!

இளைஞர்களுக்கு தன்பலம் தெரியவில்லை!  தெரிந்திருந்தால் தனித்து நின்றிருப்பார்கள்.  ஆனால் இரவல் மொழிகளிலேயே வளர ஆசைப்படுகிறார்கள்.  ஆக இன்று நம்முடைய தனித்தன்மையை இழந்து விட்டோம்.  அண்டை நாடுகள் அமைதியுடன் பூத்து குலுங்க நாம் ஜாதி, சமயம், அரசியல் என்கிற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தமிழன் என்ற உணர்வோடு ஒன்று திரள வேண்டும்"