வைரமுத்து.வலை

கவிப்பேரரசை வாசிக்கவும் நேசிக்கவும்...

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

 

ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்

 

ரஜினிக்கு பாட்டு எழுதும்போது மட்டும் யாரும் சொல்லாமலே தானாக வந்து விழுகின்றன வார்த்தைகள். அதுதான் அவருக்குள்ள வசீகரம், சிறப்பு என்கிறார் கவிஞர் வைரமுத்து.

சென்னையில் லஷ்மன் ஸ்ருதியின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்தப் பாடல் பிறந்த விதம் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவற்றில் சிலவற்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் பாடி பரவசப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதுவே ஒரு தனி அனுபவமாக அமைந்தது ரசிகர்களுக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம் பற்றி அவர் விளக்கியபோது, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.

அவர் பேசியதிலிருந்து...

ரஜினி அவர்கள் நடித்த முத்து படத்துக்கு பாடல் எழுதுவதற்காக ரஜினிகாந்த், நான், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றுவிட்டார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறைக் கதவையும் அடைத்துக் கொண்டார்.

ரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி ஒரு சம்பவத்தைச் சொன்னார் ரஜினி அவர்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு வென்ற அலெக்சாண்டரே, தான் இறக்கும்போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து, இவன் போகும்போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம். இதை நண்பர் ரஜினி அவர்கள் சொன்னபோது, கேட்டு வைத்துக் கொண்டேன். அதை வைத்தே, ‘முத்து’ படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே ‘மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை..’ என்று எழுதியது இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடத்தான். ரஜினிகாந்தின் சிறப்பே, யாரையும் அவர் நேரடியாக கட்டுப்படுத்துவதில்லை. நம்மையும் அறியாமல் அவர் சொல்வதைக் கேட்போம். அவரது வார்த்தக்கு அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும், இந்த மாதிரிதான் வரிகள் அமையணும் என்று அவர் யாருக்கும் கட்டளை போட்டதில்லை. அவருக்கு எழுதும்போது தானாகவே வந்து விழுகின்றன அத்தகைய வரிகள். அதுதான் அந்த உச்ச நட்சத்திரத்தின் சிறப்பு, என்றார் வைரமுத்து.

 

 


செய்திக் கீற்று

டெல்லியில் கவிஞர் வைரமுத்து புத்தகம் அறிமுக விழா

 

கவிஞர் வைரமுத்து எழுதிய புத்தகத்தின் அறிமுக விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் நிதி மந்திரி ப.சிதம்பரம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். கருணாநிதி வெளியிட்ட புத்தகம் கவிஞர் வைரமுத்து எழுதிய கேள்வி-பதில் தொகுப்பான `பாற்கடல்' என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் சென்னையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். அந்த புத்தகத்தின் அறிமுக விழா, டெல்லியில் உள்ள டெல்லி தமிழ்ச் சங்கத்தில்' நடைபெற்றது. விழாவில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய மந்திரிகள் எஸ்.ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, வைரமுத்துவை வாழ்த்திப் பேசினர்.

தமிழை வாய்விட்டு வாசிக்கவும் விழாவில் ஏற்புரை நிகழ்த்திய வைரமுத்து, "உலகமயமாதல் என்ற புயலில் பண்பாட்டு வேர்களை அழிய விட்டு விடக்கூடாது. தொலைக்காட்சியில் மூழ்கிப் போகாமல் வாசிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழை வாய்விட்டு வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பதில் சொன்ன என்னை விட கேள்வி கேட்ட வாசகனே உயர்ந்தவன். அந்த வாசகர்கள்தான் என்னை யோசிக்கவும் வாசிக்கவும் வைத்தனர்'' என்றார். இந்த விழாவுக்கு டெல்லி தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் துரை நன்றி கூறினார். விழாவில் டெல்லியில் வாழும் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பெருமளவில் பங்கேற்றன